அணுகுண்டாகும் திருப்பதி லட்டுப் பிரசாதம்.
..........
இந்தியத் திருநாடு எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்திருக்கிறது. அந்தப் போர்களில் ஆபத்தான குண்டுகள் வீசப்பட்டு இருக்கின்றன. அப்போதெல்லாம் அதிர்வடையாத இந்தியத் துணைக்கண்டம் , தற்போது அணுகுண்டு வீசியதைப் போல ஒரு சிறிய அளவில் உள்ள லட்டு பிரசாதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அதை ஒற்றைவரியில் சொல்லப் போனால் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டு போல திருப்பதி லட்டு இந்திய தேசத்தையேப் புரட்டி போட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற கட்சி ஆளுகின்ற பாரதத்தில் திரு நரேந்திர மோடி பிரதமராக இருக்கின்ற இந்த நல்ல வேளையில் இப்படி ஒரு சூறாவளி இந்து மதத்தில் கிளம்பி இருக்கிறது. இது எங்கே போய், எப்படி முடியும் என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
லட்டு என்கிற ஒரு இனிப்பு வகை எல்லா இனிப்புக் கடைகளிலும் விற்கப்படுகின்ற ஒன்றுதான். ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படுகிற, விற்கப்படுகிற இதற்கு மட்டும் தான் லட்டு பிரசாதம்
என்கிற புனித பெயர் இருக்கிறது.
திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படுகிற அந்த லட்டிற்கு தெய்வீக சிறப்பும் புனிதமும் இருக்கிறது. அதனால் தான் அந்த
லட்டுப் பிரசாதத்தை வாங்குகிற பக்தர்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி திருப்பதி எம்பெருமாளின் திருவருளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி அவர்களையும் பெருமாளின் அருள் கடாட்சியத்திற்கு உட்படுத்துகிறார்கள். லட்டுப் பிரசாதத்தைப் புனிதமாக கருதுகிற காரணத்தினால் அது தரையில் விழுந்தால் கூட மிதிபடாமல் எடுத்து துடைத்து மீண்டும் அதைப் பயன்படுத்துகிற பக்தர்கள் உலகெங்கும் உண்டு.
அத்தகைய புனிதமான லட்டு பிரசாதத்துக்கு தான் தற்போது ஆபத்து வந்திருக்கிறது. அதுவும் சாதாரண ஆபத்து அல்ல பேராபத்து என்றே சொல்லலாம்.
இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிவுகள் இருந்தாலும் திருப்பதி எம் பெருமாள் வைணவ வழிபாட்டின் கீழ் வந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களும் ஒரு மனதோடு சென்று வழிபடுகின்ற ஒப்பற்ற தெய்வமாக எம்பெருமாள் விளங்குகிறார்.
திருப்பதி பெருமாளை தரிசிப்பதற்கு விரதம் இருப்பவர்களும் உண்டு அதுபோல் விரத காலத்திலும் மற்றும் புரட்டாசி மாதத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பினரும் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொள்வது வழக்கம். தப்பித் தவறி கூட அசைவ உணவு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவு புனிதமான திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது வழங்கப்படுகிற லட்டுப் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மற்றும் மீன் எண்ணெய் போன்றவை கலக்கப்பட்டுள்ளது என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச முதல்வர் திரு சந்திரபாபு நாயுடு புரட்டாசி மாத முதல் நாளிலேயே திருப்பதி லட்டு என்கிற அணுகுண்டைத் தூக்கிப் போட்டு அதில் இவ்வளவு வயிறு குமட்டக்கூடிய அசைவ
கலப்பு பொருள்களை சேர்த்திருக்கிறார்கள், அதுவும் முன்னாள் முதல்வர் திரு ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கிறது. என்று பொதுவெளியில் பேசி பெருமாளுக்கு இப்படி ஒரு அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்று மன வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டும் அல்லாது அது குறித்து
உணவு தர ஆய்வகத்தில்
சோதனை நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
கடந்த ஒரு மூன்று நாட்களாக
இந்தியா முழுவதும் லட்டுப் பிரசாதத்தின் அசைவ நெடி தான் எல்லோருடைய மூக்கையும் துளைத்து எடுத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பல அரசியல் தலைவர்களும், கூகுள் தலைமைச் செயல அலுவலர் திரு சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் நாடெல்லா போன்றவர்கள் எல்லாம் திருப்பதி எம் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு அங்கு அளிக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை சுவைத்துவிட்டு அதன் பிறகு அதை அவர்கள் உறவினர்கள். நண்பர்கள் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறார்கள்.
முட்டையை கூடத் தொட்டுப் பார்க்காத பல பக்தர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே திருப்பதியில் லட்டு பிரசாதத்தை உண்டு விட்டு அவர்களும் அசைவர்களாக மாறிவிட்டார்களோ என்ற அச்சம் கொள்கின்றார்கள். அந்த அளவிற்கு அவர்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த லட்டு பிரசாதம் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறது. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு வருந்தி நொந்து போயிருக்கிறார்கள்.
" இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை " என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் ஜே பி நட்டா அவர்கள் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ்
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று அறிக்கை வந்துள்ளது. என்று தனது பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி இந்த பிரச்சனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது சந்திரபாபு நாயுடுவின் அரசியல் விளையாட்டு என்று தெரிவித்து
திருப்பதி லட்டு பிரசாதத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று திருப்பதி பெருமாளின் சன்னதியில் சத்தியம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு அதற்கு தயாராக இருக்கிறாரா? என்று சவால் விட்டு இருக்கிறார்.
இது குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு உள்ளது அந்த முடிவு வரும் வரை அமைதியாக இருக்கும்படி பக்தர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பதியில் லட்டு விவகாரம் தற்போது வானை தொட்டுவிடும் அளவிற்கு எட்டி இருக்கிறது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நான்கு நிறுவனங்கள் நெய் வழங்குவதற்காக ஒப்பந்த பள்ளி பெறப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவாம். அதில் தமிழ்நாடு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் அதில் இடம் பெற்று இருக்கிறது. அந்த நிறுவனம் சோயா பீன்ஸ் எண்ணெயுடன் மாட்டு கொழுப்பு மற்ற வேண்டாதவற்றையெல்லாம் சேர்த்து இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். அது குறித்து நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்கனவே லட்டு பிரசாதத்தைச் சாப்பிட்டவர்கள்
இப்போது வாந்தியா எடுக்க முடியும் என்று சில பக்தர்கள் மிகுந்த கவலையோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதில் எல்லாம் கலப்படம் செய்ய மாட்டார்கள் என்கிற நம்பிக்கைக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள்.
திருப்பதி எம்பெருமாளின் சன்னதியில் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்திலேயே இத்தகைய கொடுமையான கலப்படம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று இந்து மதத்தினர் அனைவரும் ஒருமித்தமாக வருந்தி கொண்டிருக்கிறார்கள்.
நின்ற திருக்கோலத்தில் திருப்பதி எம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். இந்தியாவில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்ற ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிற அங்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் மூலம் வசூல் ஆகிறது. இது தவிர நாளொன்றுக்கு சுமார் 95 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி வருவாய் ஈட்டப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
. வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த திருத்தலத்தில் இப்படி ஒரு அநியாயம் நடந்திருப்பது இந்து மக்களின் மத உணர்வுகளையும் பக்தி உணர்வையும் புண்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. யார் செய்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு லட்டு என்ன செய்துவிடும்
என்று அமைதியாக இருக்க முடியவில்லை ஏனென்றால் அந்த லட்டை பிட்டால் அதிலிருந்து பக்தி நறுமணம் வருவதற்குப் பதிலாக வேறு ஏதோ வந்து மூக்கை துளைத்தால் அந்த வேதனைக்கு ஈடு இணை ஏதுமில்லை.
இந்த விவகாரம் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தவறு செய்த குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இது போன்ற ஒரு பாவச் செயல் மீண்டும் வராத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது மட்டுமல்ல இது போன்ற பல இந்து கோயில்களில் இப்படிப்பட்ட
பாவ காரியங்கள் நடத்த விட கூடாது என்று மாநில அரசுகள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அரசு அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
...... சக்திமான் அசோகன்.