Saturday, 28 September 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்- 23

..........

வானத்தை மடித்து வைக்கிறேன்

கடல் நீரைக் குடித்து விடுகிறேன்

வாமன நெகிழியை என்ன செய்வேன்?

........

உள்ளே வரும்போது கடித்த எறும்பை

நசுக்கிக் கொல்கிறேன்

வெளியேறும் போது கடித்த எறும்பை

பத்திரமாக இறக்கி விடுகிறேன்.

.......

முட்டிச்  செத்தவர்களை விட

மோதி செத்தவர்களே அதிகம்

அலையும் தெரு மாடுகள்.

.......

நூல் மட்டும் இருக்கிறது

ஆள் போய்விட்டார்

நூறாண்டு வாழ நூல் எழுதியவர்.

......

பல மருந்து சாப்பிட்டும் மரிக்கவில்லை சிசு

பட்டினியில் சாகிறாள்

பாலியல் தொழிலாளி.

......

தாவி தாவி பிடிக்க முயலும்

 தவளை ஆசை தீர தண்ணீருக்கே வருகிறது

நிலா.

......

உச்சந்தலையில் உட்கார அழைக்கிறது ஊசி

உட்கார மறுக்கிறது

காற்று நிறைந்த பலூன்.

.....

வேடிக்கை பார்த்தது

வீட்டு கூரையாக மாறுகிறது

விளம்பர பதாகை.

......

நொறுங்கி கிடக்கும் தேநீர் கோப்பை

ஒவ்வொரு துகளும் பிரதிபலிக்கிறது

தம்பதி கோபம்.

.......


எப்படியும் அம்மா வருவாள்

எப்படியும் இரை தருவாள்

என்று வாய்ப்பிளந்து காத்திருக்கும் குஞ்சுகளுக்கு

யார் சொல்வார்

அதன் அம்மா இறந்த கதை.

.......

சக்திமான் அசோகன்

....... 

28-9-2024

.......

9445104404

......


No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...