வெற்றி பெறுவாரா விஜய்
....................................................
அரசியலுக்கு அதோ வருவார் இதோ வருவார் என்று ரசிகர்களுக்கு ஆசை காட்டி, சில அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டிய ரஜினிகாந்த் அல்ல நான் என்று
அரசியல் களத்திலே அதிரடியாக
குதித்திருக்கிறார் திரைப்பட துறையில் உச்சத்தில் இருக்கும் தளபதி என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிற விஜய்.
அரசியல் வரலாற்றில் திரைப்பட துறையிலிருந்து அரசியல் களத்திற்கு வருவது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை புதிது அல்ல. ஏற்கனவே எம்ஜிஆர் , ஜெயலலிதா, தமிழக அரசியலில் தடம் பதித்து வெற்றிப்பெற்றவர்கள்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரிதாரம் பூசியவர்களே.
அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்திக் காட்டியதன் மூலம் அந்த வரிசையில் விஜய் தானும் வந்திருப்பதாக சொல்ல வைத்திருக்கிறார்.
இவருக்கு முன்பு நடிகர் கமலஹாசன் , டி ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து கையை சுட்டுக் கொண்டவர்கள். விஜயகாந்த் மட்டும் காயம் பட்டு கட்டு போட்டுக் கொண்டவர்.
இவர்கள் வெற்றி பெறாததற்கும் தோல்வி அடைந்ததற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்கடுக்காய் மக்கள் சொல்கிறார்கள். அவற்றையெல்லாம் விஜய் அலசி ஆராய்ந்து முடிவெடுத்திருப்பார் என்பது, " அரசியல் பாம்பை தன் கையில் எடுத்து விளையாடும் ஒரு சிறு குழந்தை " என்று தன்னுடைய முதல் உரையின் போது குறிப்பிட்டதிலிருந்து தெளிவாக தமிழகத்துக்குப் புரிய வைத்திருக்கிறார்.
இவர் எம்ஜிஆர் ஆக ஒளி வீசுவாரா அல்லது சிவாஜி போல
ஆவாரா என்பது மிகப்பெரிய விவாத பொருள்.
எது எப்படி இருந்தாலும் இவருடைய முதல் மாநாடு அரசியல் களத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது . சில கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஆட்சியிலும் , அதிகாரத்திலும் பங்கு என்று ஒரு அதிர்வேட்டை போட்டதன் மூலம் பல கட்சிகளை அரசியலில் வாக்கு வேட்டையாடுவதற்கு இவரை அணுகினால் என்ன என்று சிந்திக்க வைத்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. அதேபோல
காங்கிரஸ் கட்சியும் , ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கட்சிகளுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தங்களுடைய கருத்துக்களை மறைமுகமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருப்பவை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் கருத்துக்களை , நாடி பிடித்து , தன்னுடைய கட்சிக்கு தேர்தல் சமயத்தில் நூல் விடுவதற்கு தயாராக இருக்கிறது எங்களுடைய கட்சி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விஜய்.
ஆளுங்கட்சியைச் சிந்திக்க வைத்திருக்கிறார் என்று தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக வலியுறுத்தி வருகிறது. அந்த அஸ்திரத்தை
கையில் எடுத்ததன் மூலம் அவர்களுடைய கவனத்தையும் இவர் சுண்டி இழுத்திருக்கிறார் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள். அவர்கள் கூட, வரும் தேர்தலில் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிகிறது.
பெண்களை முன்னிலைப்படுத்துவதும் , பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களைத் தங்கள் வழிகாட்டியாக, கொள்கை தலைவர்களாக அடையாளம் காட்டி இருப்பது அரசியல் களத்தில் வாக்குகளை வசப்படுத்தும் ஒரு உத்தியாகத்தான் தெரிகிறது.
திராவிடம், தேசியம், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், இப்படி பல்வேறு கவர்ச்சிகளை இவருடைய கட்சி வெளிப்படையாக கொண்டிருப்பதன் மூலம் வரப்போகிற தேர்தலில் வாக்கு ஈர்ப்பு சக்தியாக மாறக்கூடிய வலிமை இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதைப் பற்றி எல்லாம் இப்போது எதையும் கூற முடியாது. அத்தனையும் தேர்தல் நேரத்தில் மக்களுடைய மன ஓட்டத்தைப் பொருத்தே அமையும் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
. இளைஞராக இவர் இருப்பது மட்டுமின்றி நடிப்புலகில் உச்சத்தில் இருக்கின்ற அவர் தனது வருமானத்தை தியாகம் செய்து பொதுமக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என்கிற கருத்து இவருக்கு இளைஞர்கள் மத்தியில் அதீத செல்வாக்கை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
வரும் 2026 தேர்தல் களம் இளைஞர்களுக்கானது. அறிவியலில் மாற்றங்கள் வந்தது போல அரசியல் மாற்றம் வரக்கூடாதா என்று தனது பேச்சில் விஜய் குறிப்பிட்டது போல வரும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும் என்று இளைய சமுதாயம் எதிர்பார்க்கிறது.
இவர் துணை முதல்வர் உதயநிதிக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். எந்த இளைஞர் வெற்றி பெறுகிறார் என்பது இளைஞர்களின் மற்றும் பெண்களின் கையில் தான் இருக்கிறது.
எல்லா நடிகர்களும் கட்சி தொடங்கும் போது நிறைய செலவு செய்து கூட்டத்தைத் திரட்டி மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல காட்சி தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சி ஆட்சிக்கு ஆனது அல்ல என்பதை மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடும் மிகப்பெரிய பொருட் செலவில் ( சுமார் 200 கோடி என்று
வதந்தி பரவியிருக்கிறது.) நடத்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுச்சியோடு கூடியிருக்கிறார்கள்.
இளைஞர் விஜய்யும் எழுச்சி உரையாற்றிருக்கிறார்.
தொடக்கம் சிறப்பாக தான் இருக்கிறது. வெற்றி என்பது மக்கள் பணி பொதுப்பணி ஆற்றுவதில் தான் அடங்கி இருக்கிறது.
அண்மையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிப் பணியை நீங்கள் கச்சிதமாக ஆற்றுங்கள். புதிதாக வந்துள்ள கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருப்பதன் மூலம்
தமிழக வெற்றி கழகத்தை எதிர்கொள்வதற்காக சாணக்கிய தந்திரங்கள் வகுத்து இருப்பதாக
அவரது கட்சியினர் சொல்கிறார்கள்.
தமிழக அரசியல் களம் ஜாதி மதம் இடம் இவைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
ஜோசப் விஜய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவருடைய ஜாதி பலமும் அவருக்கு கை கொடுக்கும் என்பது பல அரசியல் தலைவர்களின் கணக்கு.
அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கு ஏறக்குறைய ஓர் ஆண்டு காலத்திற்கு மேல் இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியில் அவரது கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பு அமையும்.
அதற்கான செயல் திட்டங்களை அதன் தலைவர் விஜய் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் அப்படி செயல்படுத்தினால் அவருக்கு தேர்தல்களம் சாதகமாக அமையும்.
எம்ஜிஆருக்கு இருந்தது போல இவருக்கும் பெண்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது இவருக்கு கூடுதல் பலம். இளைஞர்களின் எழுச்சியை வாக்குகளாக மாற்றக்கூடிய அரசியல் தந்திரம் இவருக்கு இருக்குமேயானால் இவர் அசைக்க முடியாத ஒரு தலைவராக விளங்குவார். தமிழக அரசியல் வானில் வலம் வருவார். பொறுத்திருந்து பார்ப்போம்.
.......
சக்திமான் அசோகன்
........
ஆசிரியர்
வாக்காளர் சக்தி
......
30-10-2024
......