Sunday, 20 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 36

...........

வளர்த்து ஆளாக்கிய தந்தை முன்

தலை வணங்குகின்றன

நெற்கதிர்கள்.

......

வானத்து மேகம்

முகம் பார்க்கிறது

விரல் இடை சோப்பு நுரை

......

ஆன்றவிந்த ஞானிகள்

அமைதியாக உறங்குகிறார்கள்

நனைந்த தீப்பெட்டி.

......

எந்தப் பூவும் இலையும் காயும்

என்றும் பார்த்ததில்லை

சொந்த வேர்.

......

விட்டம் பிசகாமல்

வட்டமடிக்கிறது பருந்து

படம் பிடிக்கிறது அசைவற்றக் குளம்

......

கொம்புள்ள மிருகத்தைக்

கொம்பில்லா மிருகம் அடிக்கிறது

என்ன செய்யும் ஆயுதம்.

......

தோற்றவன் காட்டுக்குள் போனான்

அங்கேயும் பிரிவால் அழுது கொண்டிருக்கிறது

ஒற்றைக் குயில்.

...... 

என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறது

ரத்த பந்தம்

பசி உள்ள கொசு.

......

ஆட்டு மந்தை 

மேட்டில் ஏற முடியாமல் தவிக்கிறது

ஓடிவந்த மழை தண்ணீர்

......

செம்புலப் பெயல் நீருக்குப் போட்டி

மார் தட்டுகிறது

சாயப்பட்டறை கழிவு நீர்.

......

சக்திமான் அசோகன்

......

20-10-2024

......


No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...