அண்ணல் காந்திக்கு அடையாளம் தெரியாத ஒருவனின் அஞ்சலி
............................
காந்தியைப் போலிருந்த எங்கள் தாத்தா
எத்தனையோ தேர்தல்களில்
நின்றுப் பார்த்தார்
அத்தனையிலும் மக்கள் அவரைத் தோற்கடித்தார்.
பின்னர் உடை மாற்றித்
தன்னை முற்றிலும்
மாற்றிக் கொண்டார்.
இப்போது எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்று
அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
தவிர்க்க இயலாத தலைவரானார். தொண்டர்கள்
தன்மானச் சிங்கம் என்றார்.
ஆண்டுதோறும் நடக்கும் காந்தி ஜெயந்தியில்
அவரும் இருக்க வேண்டும்.
அப்போதெல்லாம் அவருக்குள் ரசாயன மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கும்.
அஞ்சலி செலுத்தும் போது
அவரையும் அறியாமல் உருளும் கண்ணீர் துளி.
ஒருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு
ஒன்றும் அறியாதவர் போல
நடித்துக் கொள்வார்.
உள்ளுக்குள்ளே அழுது கொண்டு
வெளியிலே சிரித்துக் கொள்வார்.
சிலைக்கு மாலையிடும் போதெல்லாம்
குண்டடிப்பட்ட மார்பைத் தடவிப் பார்த்து
இன்னும் இரத்தம் வருகிறதா என்று தொட்டுப் பார்ப்பார்.
உள்மனம் அவரைத் தடுத்து நிறுத்தும்.
மறுபடியும் காந்தியாக நீ மாறினால் தெரு கோடியில் தான் நிற்க வேண்டும் புரிந்து கொள்
என்று எச்சரிக்கை செய்யும்.
என்ன செய்வார் எங்கள் தாத்தா
இரட்டை வேடம் போடுகிறார்
.......
சக்திமான் அசோகன்
......
02-10-2024
......
No comments:
Post a Comment