Saturday, 30 November 2024

முயல்(குழந்தை பாடல்)

 சக்திமான் அசோகன் கவிதைகள் 62

...........

               முயல்

                .........

         குழந்தை பாடல்

                 ..........


நான் ஒரு முயலு

நீயும் ஒரு முயலு 

பசிக்குது நம் வயிறு

போவோம் காரட் வயலு.


வயலு பூரா காரட்டு

வயிறு முட்ட சாப்பிடு

ஓடி ஓடி தின்னலாம்

ஊருக்கும் கொடுக்கலாம்.


அனைவருக்கும் கொடுக்கலாம்

அவர்கள் தின்ன  ரசிக்கலாம்

இருக்கிறதைப் பகிரலாம்

எல்லோருமே வாழலாம்


இருக்கிறது எல்லாமே

எல்லோருக்கும் பொது தானே

கொடுக்கிற மனசு வந்தாலே

கூடி வாழலாம் சரிதானே.

........

சக்திமான் அசோகன்

......

30-11-2024

......

Thursday, 28 November 2024

கனவு மட்டும் போதாது

 சக்திமான் அசோகன் கவிதைகள் 61

........

          கனவு மட்டும் போதாது

     .                ................ 


கவலை என்ற வலைக்குள்ளே

கனவு என்றும் சிக்குவதில்லை

கடலலை போன்ற நினைவலை

கனவை என்றும் அழைப்பதில்லை.


தூக்கம் என்னும் அரக்கியவள்

தூக்கம் கெடுக்கும் சிறுக்கியவள்

பக்கம் வராது பார்த்துக் கொண்டால்

படுக்க வருவாள் கனவு கன்னி


இமைக் கதவை இறுக்கிச் சாத்தி

இடைவெளியை நெருக்கிப் பூட்டி

இதயக்கதவு போடும் ஓலத்தில் 

எந்தக் கனவும் வருவது இல்லை


கனவு மட்டும் போதாது என்று

களவு போன காதலுக்குத் தெரியும்

பகல் கனவு பலிக்காது என்று

படுத்தவனுக்கு நன்றாய் புரியும்


கனவு படகு முன்னால் போகும்

காரிய வெற்றி பின்னால் சேரும்

கனவு மட்டும் போதாது என்றால்

கண்டுபிடிப்பு என்றும் தொடரும்.


கனவு மட்டும் போதும் என்றால்

கைக்கிளையின் ஒரு கிளையாகும்

கனவு மட்டும் போதாது என்றால்

கல்யாணம் தொடர்ந்து வாழ்வு இனிக்கும்.

.......

சக்திமான் அசோகன்

......

28-11-2024

.....

குறிப்பு.

..............

கவிதை உறவு திங்கள் தோறும் நடத்தும் கவிஞர்கள் சந்திப்பு இணைய நிகழ்ச்சியில் கலைமாமணி ஏர்வாடியார் தலைமையில் பேராசிரியர் அனுராதா முன்னிலையில் பங்கேற்று வாசித்த கவிதை.

Wednesday, 27 November 2024

தலைவர் வீட்டுக் கல்யாணம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 60

...........

பிச்சையிட நினைக்கிறேன்

பேருந்து ஓட்டுநர் கை நீட்டுகிறார்

சில்லறை.

........

வெற்றி பெற்றவனுக்கு நேரம் நல்ல நேரம்

தோல்வியுற்றவனுக்கு அதே நேரம் கெட்ட நேரம்

பாவம் நேரம்.

......

மகிழ வேண்டியவை 

அழுகின்றன

நாளை தலைவர் வீட்டு கல்யாணம்

.......

Instead of happiness 

They weep

Tomorrow Rich man's marriage.

......

சக்திமான் அசோகன்

.......

27-11-2024

.......

Friday, 22 November 2024

பாசமுள்ள தோசைக்கல்.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 59

..........

Bursted bullet pieces 

Seen every where 

Cigarette buds.

குண்டுகளின் எச்சங்கள்

மிச்சம் சிதறிக்கிடக்கிறது

துண்டு பீடி.

.......

ஒட்டுமில்லை உறவுமில்லை

விட்டுபிரிய நினைக்கிறது உறவு 

விடமறுக்கிறது தோசைக்கல்.

.......

குடித்தவனை அனுப்பிவிட்டு 

குடிக்காதவனை அழைக்கிறது 

கள்ளச்சாராயம்.

.......

சக்திமான் அசோகன் 

......

22-11-2024

......

B

Wednesday, 20 November 2024

Milk ledger account

 சக்திமான் அசோகன் கவிதைகள் 58

............

Written on kitchen wall

Unwritten on mother's chest 

Milk ledger account.

.......

எழுதியது அடுத்தபடியில்

எழுதாதது தாயின் நெஞ்சுக்குழியில்

பால் கணக்கு.

........

ஈரம்

இருக்கும் வரை இருக்கும்

மணல் வீடு.

.......

ஏகலைவன் வாரிசு

யாருக்குமே இல்லை

கட்டைவிரல்.

.......

சக்திமான் அசோகன்

.......

20-11-2024

.......


Tuesday, 19 November 2024

இரண்டு இறக்கை

 சக்திமான் அசோகன் கவிதைகள் 57

..............

நல்ல இடத்தில் இறக்கி விடு

காற்றிடம் கெஞ்சுகிறது

மழைத்துளி.

........

கால்வாசியை

விட்டு வைத்திருக்கிறது

கருணைக்கடல்.

........

எவ்வளவு பெரிய வானம்

இருக்கட்டுமே என்னிடம் இருக்கிறது

இரண்டு இறக்கை.

........

சக்திமான் அசோகன்

........

19-11-2024

........

Monday, 18 November 2024

போனகனவு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 56

...........

இடும்போது உற்ற வலியை விட

துடிக்கவைக்கிறது

அது கூமுட்டையான சேதி.

.......

பெருந்தீ

அணைக்கத் திணறுகிறது

ஒரு வாளி நீர்.

........

மேல் இமை கீழ் இமை

இரு கதவையும் திறந்து காத்திருக்கிறேன்

வரவே இல்லை போன கனவு.

Eyelids doors

 Open to receive the dreams 

Returned none.

.......

சக்திமான் அசோகன்

.......

18-11-2024

......

Saturday, 16 November 2024

எழுந்து வா எரிமலையே

 சக்திமான் அசோகன் கவிதைகள் 55

..........

எத்தனை காலம் தான்

 ஏழையாவே  இருப்பாய் 

எழுந்து வா என் தோழா


இனி இழப்பதற்கு 

என்ன இருக்கிறது 

ஏழ்மையைத் தவிர 

எழுந்து வா என் தோழா


எழாதே என்று

எத்தனை கதை

 சொல்வார் 

எத்தர்கள்  

இங்கே தோழா 


அது அத்தனையும் 

வெட்டிக்கதை 

அவை வீணர்களின்  

கட்டுக்கதை 

அதைவெட்டி தூர எறி தோழா


நீ இப்படியே 

இருந்து விட்டால்

இடுப்பு துணியையும் 

எட்டிப் பிடுங்கி விடுவார் 

பத்திரம் என் தோழா


அடிமையாய் இருந்து 

அடுத்தவருக்குப் படியாகி

அடங்கி கிடந்தது போதும் தோழா


எதற்காக இந்தவாழ்வு 

அதை எடுத்தெறிந்து வா 

இமயம் அருகில் என் தோழா


நீயும் பத்து மாதம்

 உன்னை ஏமாற்றி 

எத்தி பிழைக்கும் 

அவனும் பத்துமாதம் 

இதில் என்ன பேதம் 

எழுந்து வா என் தோழா


பாலும் தேனும் 

பசிக்கு நான் தருவேன் 

என்று நாளும் 

சூளுரைத்து

உன்னை நாளும்

 பட்டினியில் போடுவான் தோழா

இனி அந்த நயவஞ்சகனை

நம்பியது போதும் தோழா


விலங்கை உடைத்து 

நம்பிக்கைப் புடைக்க

வீறு கொண்டு எழுதோழா

 

பொறுத்தது போதும் 

பூமி போல

நீ பொங்கி எழு 

எரிமலையாய் தோழா


எடுத்து வை

 உன் வலது காலை

எரியட்டும் உன்கண்ணில் தீச்சுவாலை


புறப்படு என் தோழா 

போகும் தூரம் 

அதிகம்  இல்லை

அறம் ஒன்றே  

நமக்கு துணை

ஆர்ப்பரித்து  எழு தோழா


 ஏமாற்றி பிழைப்பவனை  

எட்டி உதைத்திட 

இதுதான் நேரம்  தோழா

 இனிதான் நம் காலம் தோழா

 இனி எதற்கு தயக்கம் தோழா 


ஓட்டை விற்றுவிட்டு 

ஓட்டாண்டியாய் போன உன்னை நாட்டைச் சுரண்டுவதற்கு தனது

வேட்டை நாயாய்  மாற்றிடுவான் தோழா 

இந்த நாட்டை சுரண்டுகிற கோட்டானைச் சிறைக்கூட்டுக்குள் தள்ள கொடுவாளை எடு தோழா 


அஞ்சாதே எங்கும் லஞ்சம்

 எதிலும் வஞ்சம்

துஞ்சாதே துள்ளி எழு


உழைப்பதற்கு மரியாதை 

இல்லை எனில் ஊரை கொழுத்து

அந்த சாம்பலில் இருந்து நம் சாம்ராஜ்யத்தைப் படைப்போம்


தரையில் கிடந்தது போதும்

 இனி சிகரம் தொடு தோழா 

தடையெல்லாம் உடையும்

புதுமடை எங்கும் திறக்கும்

எழுந்து வா என் தோழா 

 துணிந்து வா

என் தோழா

தோள்தருகிறேன் வா தோழா.


இந்த மண்ணும் நம் சொந்தம்

இந்த மானிடமும் நம் சொந்தம்

பஞ்சபூதமும் நம் சொந்தம்

காக்க வேண்டியது நம்கடமை 

வறுமை போக்க வேண்டியது நம் உடமை

வா என் தோழா வரிசையாக தோழா

.......

சக்திமான் அசோகன்

.....

16-11-2024

.......






Thursday, 14 November 2024

Wet Cotton

 With out wings it the scaled sky 

Could 'nt fly cry 

Wet Cotton.

சக்திமான் அசோகன் கவிதைகள் 55

...............

கனவு காண தூங்க நினைக்கிறது

நினைவு ஏனோ தூங்க மறுக்கிறது

எவ்வளவு பெரிய இரவு.

.......

உனக்கு ஒரேயொரு முகம் என்றேன்

உடைந்து போனது கண்ணாடி

இப்போது பல முகம் முன்னாடி.

.......

சிறகின்றி பறந்த பறவை

பறக்க முடியாமல் தவிக்கிறது

நனைந்த பஞ்சு.

........

சக்திமான் அசோகன்

.......

14-11-2024

........

Wednesday, 13 November 2024

Child's lalo.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 54

.............

வண்ணத்துப்பூச்சி பிடரியை வாஞ்சையுடன் கோதினேன்

விரல் எங்கும் ரங்கோலி கோலம்.

.......

கருங்கூந்தலில்

ஓர் அழகிய பின்னல்

மின்னல்.

.......

எழுத்தும் இல்லை

இலக்கணமும் இல்லை

உலகெங்கும் மழலை மொழி.

.....

No script 

No grammar 

Yes world wide child's lalo.

......

சக்திமான் அசோகன்

......

13-11-2024

.......

Monday, 11 November 2024

More rooms.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 53

...........

Four rooms in my heart 

Do not vacate for want of space 

More rooms in lungs.

......

இதயத்தில் நான்கு அறை 

போதாது என்று போய் விடாதே

நுரையீரலில் ஆயிரம் அறை.

.......

அணிலுக்குப் பயந்து

மடியில் விழுகிறது ஒரு கனி

விழிக்கிறார் புத்தர்.

.......

நெருப்புத் துண்டை

நெஞ்சுக்குள் மறைத்துக்கொள்கிறது பஞ்சு

இறுதியில் மிஞ்சியது சாம்பல்.

.......

சக்திமான் அசோகன்

.......

11-11-2024

.......


Sunday, 10 November 2024

Perennial Rivers

 சக்திமான் அசோகன் கவிதைகள் 52

...........

Perennial River

........

Fear over man 

Hide sand on its feet 

Perennial river.


மனிதனுக்குப் பயந்து

மணலைக் காலடிக்குள் மறைத்து வைக்கிறது

ஜீவநதி.

.......

சிதறு தேங்காய்

பதறி கண்ணீர் வடிக்கிறது

பெற்ற தென்னை.

.......

பிணத்துக்குக் கூட

பெண் தர தயாராக இருக்கிறார்கள்

பேராசைப் பெற்றோர்.

......

சக்திமான் அசோகன்

......

10-11-2024

......

Saturday, 9 November 2024

Guru's alarm.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 51

............

Guru has gone 

Desciples wake up

Guru's alarm.

.......

போய்விட்டார் குரு

விழிக்கிறார்கள் சீடர்கள்

குரு வைத்த அலாரம்.

......

எல்லை காக்க எத்தனை பிள்ளை

எல்லோருக்கும்

எல்லையே தொல்லை.

......

தேவைப்பட்டது இத்தனை காலம் 

இப்போது தேவையில்லை பறவைக்கு பாரம் 

உதிர்கிறது இறகு.

........

சக்திமான் அசோகன்

.......

09-11-2024

.......

Thursday, 7 November 2024

That anything is not mine.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 50

.............

Robbers 

Can steal anything from me 

That anything is not mine.

.......

இருளைக் கண்டு பயந்து மறைகிறது

அதனால்

என்னுடையது அல்ல என் நிழல்.

.......

என்னிடமிருந்து

திருடர்கள் எதை வேண்டுமானாலும் திருடட்டும்

எது என்னுடையது?

.......

தூங்குவதற்கு முன்னும்

எழுந்ததற்குப் பின்னும் மட்டுமே நான்

மற்ற பொழுது பிணம்.

.......

சக்திமான் அசோகன்

......

07-11-2024

......


Wednesday, 6 November 2024

Dance of a branch

 சக்திமான் அசோகன் கவிதைகள் 49

............

The singing cuckoo left

dance starts 

The bench of branch.

.....

பாடிய குயில் பறந்த பிறகும்

ஆடுகின்றது

அது அமர்ந்த கிளை.

.......

எப்போது சாப்பிடும்

எல்லா உணவையும் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும்

தாய் பறவை.

.......

அதையும் அடைகாக்க ஆசைப்படுகிறது காகம்

குழந்தை ஊதும் காற்றின் முட்டை

.........

சக்திமான் அசோகன்

.......

06-11-2024

.......

Tuesday, 5 November 2024

Washermen 's poor wife.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 48

.................

Varieties of silk sarees 

No desire to wear 

Washermen 's poor wife.

பல தினுசுகளில் பட்டுப்புடவை

உடுத்திப் பார்க்க ஆசை இல்லை

ஒட்டுத்துணியுடன் வண்ணார் மனைவி.

........

விரலில் மை

வாக்களித்துவிட்டு வெளியில் வந்து காட்டுகிறார்

முதல் குடிமகன்.

.......

வீட்டில் தட்டைக் கழுவ சண்டையிட்டு

வெளிநாடு போனான்

கிடைத்தது தட்டு கழுவும் வேலை.

......

சக்திமான் அசோகன்

......

05-11-2024

......

Monday, 4 November 2024

Dowry marriage

 சக்திமான் அசோகன் கவிதைகள் 47

............

Received heavy dowry for his marriage 

His wife delivered many children 

All girls😄


உயரமானவனை ஒட்டடைக்குச்சி என்றார்கள்

மொட்டை அடித்தான்

இப்போது தீக்குச்சி என்கிறார்கள்.😄

......

வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்தான்

வரிசையாக பிறந்தன

பெண் பிள்ளைகள்.😄

........

எங்கும் மணல் திட்டு

ஆனாலும் பயணிக்கிறது

பாலைவனக் கப்பல். 😄

.......

சக்திமான் அசோகன்

.......

04-11-2024

.......

Sunday, 3 November 2024

Pearls with wings

 சக்திமான் அசோகன் கவிதைகள் 46

...........

இறகு முளைத்த முத்துகள்

இருட்டுக்குள் பறக்கின்றன

கடுகு நிற மின்மினி பூச்சிகள்.🤑

.......

அடி வாங்கிய போது அழவில்லை

அடி வாங்காமல் அழுகிறது

நாயனம் கைவிட்ட தவில்.😘

..... 

கச்சேரி களை கட்டுகிறது

மேடையில் ஒரே ஒரு ஜால்ரா

மேடை எதிரில் ஆயிரம் ஜால்ரா.😄

......

சக்திமான் அசோகன்

......

03-11-2024

......

Pearls with wings

Flying in dark 

Little firefly insects.

.....

Saturday, 2 November 2024

மழை மாமழை

 சக்திமான் அசோகன் கவிதைகள் 45

............

மழையே மழையே

மாமழையே

வானத்து மேகத்தின் 

திருமகளே

விலை மதிப்பிலா நீர் அமிழ்தை

பூமிக்கு தருகிற பொன்மகளே.


                         .... மழையே மழையே...


காமதேனுவை

நான் கண்டதில்லை அவள்

கருணையின் வடிவை 

நான் அறிந்ததில்லை

ஆனால் உன்னை

அறிந்ததுண்டு

அன்பின் உருவம் என்று

பார்த்ததுண்டு.


                .... மழையே மழையே...


தானம் தர்மம் இரண்டுக்கும்

தாயாய் உன்னை கண்டதுண்டு

பூமி உயிர்ப்புடன் வாழ்வதற்கு

சாமி போல வந்துநீ காப்பதுண்டு.

அழையா விருந்தாளியாய்

நீ வரும்போது

அலட்சியப்படுத்தும் இப்பூவுலகம்

அழைத்தும் நீ வராவிடில்

அசிங்கப்படுத்தும் இத்தீவுலகம்.


                   மழையே மழையே,...


கடலில் நீ விழும் போது

கடனை நீ செலுத்துகிறாய்

பாலை நிலத்தில் நீ

வரும்போது

பாவங்களை நீ கழுவுகிறாய்

கழனிக்கு நீர் தரும்போது

பயிர்களை நீ தழுவுகிறாய்

காடுகளில் நீ பெய்யும் போது

கடமையை நீ ஆற்றுகிறாய்


                        மழையே மழையே..


ஒருமுறை நீ வராவிட்டால்

பல தலைமுறை மறைந்து போகும்

பலமுறை நீ வந்தாயென்றால்

அடைமழை என பெயர் கொடுக்கும்

எப்போது நீ வந்தாலும்

பள்ளங்களை நிரப்புகிறாய்

எங்கே நீ கற்றாய் இந்த ஏற்றத்தாழ்வில்லா பொருளாதாரம்

உன்னிடம் பாடம் கற்பதற்கு

ஒருவருமே இவ்வுலகில் இல்லை அம்மா

எல்லோரும் சமம் என்று

எண்ணுகின்ற உன்னை போய்

பொல்லாங்கு பேசுதம்மா


மேட்டுக்குடி மேதை யாவும்

வெள்ளம் என்று காட்டுச்சத்தம் போட்டிடும்

அப்போது நீயோ வழி தேடி அலைந்து விழி பிதுங்கி நிற்பாய்

என் இதயம் நிறைந்தவளே

உன்னிடம் ஒரு விண்ணப்பம்

எப்போது நீ வந்தாலும்

ஏழை குடிசைக்குள் 

எட்டிப் பார்க்க மாட்டேன் என்று

சத்தியம் நீ செய்து தர

வேண்டும் 


                      மழையே மழையே...


குருவிக்கூட்டின் மீது

நீ கோபம் கொள்ளக்கூடாது

நடைபாதை ஏழைகளை

நீ நனைத்திடக்கூடாது

ஏரி குளம் எல்லாமும்

என்றும் காயக்கூடாது

நீர் நிலை கண்டு வழங்கும்

நீதியில் சுணக்கம் கூடாது

விருந்தினராய் நீ வந்து

மூன்று நாள் தங்கக்கூடாது


            மழையே மழையே....


........

சக்திமான் அசோகன்

......

02-11-2024

......






                 

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...