Saturday, 2 November 2024

மழை மாமழை

 சக்திமான் அசோகன் கவிதைகள் 45

............

மழையே மழையே

மாமழையே

வானத்து மேகத்தின் 

திருமகளே

விலை மதிப்பிலா நீர் அமிழ்தை

பூமிக்கு தருகிற பொன்மகளே.


                         .... மழையே மழையே...


காமதேனுவை

நான் கண்டதில்லை அவள்

கருணையின் வடிவை 

நான் அறிந்ததில்லை

ஆனால் உன்னை

அறிந்ததுண்டு

அன்பின் உருவம் என்று

பார்த்ததுண்டு.


                .... மழையே மழையே...


தானம் தர்மம் இரண்டுக்கும்

தாயாய் உன்னை கண்டதுண்டு

பூமி உயிர்ப்புடன் வாழ்வதற்கு

சாமி போல வந்துநீ காப்பதுண்டு.

அழையா விருந்தாளியாய்

நீ வரும்போது

அலட்சியப்படுத்தும் இப்பூவுலகம்

அழைத்தும் நீ வராவிடில்

அசிங்கப்படுத்தும் இத்தீவுலகம்.


                   மழையே மழையே,...


கடலில் நீ விழும் போது

கடனை நீ செலுத்துகிறாய்

பாலை நிலத்தில் நீ

வரும்போது

பாவங்களை நீ கழுவுகிறாய்

கழனிக்கு நீர் தரும்போது

பயிர்களை நீ தழுவுகிறாய்

காடுகளில் நீ பெய்யும் போது

கடமையை நீ ஆற்றுகிறாய்


                        மழையே மழையே..


ஒருமுறை நீ வராவிட்டால்

பல தலைமுறை மறைந்து போகும்

பலமுறை நீ வந்தாயென்றால்

அடைமழை என பெயர் கொடுக்கும்

எப்போது நீ வந்தாலும்

பள்ளங்களை நிரப்புகிறாய்

எங்கே நீ கற்றாய் இந்த ஏற்றத்தாழ்வில்லா பொருளாதாரம்

உன்னிடம் பாடம் கற்பதற்கு

ஒருவருமே இவ்வுலகில் இல்லை அம்மா

எல்லோரும் சமம் என்று

எண்ணுகின்ற உன்னை போய்

பொல்லாங்கு பேசுதம்மா


மேட்டுக்குடி மேதை யாவும்

வெள்ளம் என்று காட்டுச்சத்தம் போட்டிடும்

அப்போது நீயோ வழி தேடி அலைந்து விழி பிதுங்கி நிற்பாய்

என் இதயம் நிறைந்தவளே

உன்னிடம் ஒரு விண்ணப்பம்

எப்போது நீ வந்தாலும்

ஏழை குடிசைக்குள் 

எட்டிப் பார்க்க மாட்டேன் என்று

சத்தியம் நீ செய்து தர

வேண்டும் 


                      மழையே மழையே...


குருவிக்கூட்டின் மீது

நீ கோபம் கொள்ளக்கூடாது

நடைபாதை ஏழைகளை

நீ நனைத்திடக்கூடாது

ஏரி குளம் எல்லாமும்

என்றும் காயக்கூடாது

நீர் நிலை கண்டு வழங்கும்

நீதியில் சுணக்கம் கூடாது

விருந்தினராய் நீ வந்து

மூன்று நாள் தங்கக்கூடாது


            மழையே மழையே....


........

சக்திமான் அசோகன்

......

02-11-2024

......






                 

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...