Tuesday, 10 December 2024

மரம் ஒரு மரம்

 மரம் ஒரு வரம்

.........


வெட்டுகிற மனிதா

வெட்டுவதைச் சற்று நிறுத்து.

உற்றுப் பார் நான்

தனி மரம் அல்ல.

ஒரு சமுதாயம்.


அண்ணாந்து பார்

என் கிளையில் ஆயிரம் குருவிக்கூடு

அத்தனைக்குள்ளும்

வாய்ப்பிழக்கும் குஞ்சுகளும் முட்டைகளும் குளுவான்களும்.

நான் போன பிறகு

அத்தனையும் எங்கே போகும்.

அவற்றுக்கு இடம் தந்து விட்டு

என்னை வெட்டு.


உன்னை வெட்டும் போது

நீ போடும் சத்தம்

உலகுக்கே கேட்கும்.

என்னை நீ வெட்டும் போது

நான் போடும் சத்தம்

யாருக்கு கேட்கும்.?


பூ வைப்பார்

அதில் அமரும் தேனீயைப் பார்

அந்த ஈக்களுக்கு

போக்கிடம் தந்துவிட்டு

என்னை வெட்டு.


ஒரு சொட்டு தேனை

உன்னால் உருவாக்க முடியுமா?

உன் விஞ்ஞானத்துக்கு தான் தெரியுமா?

தெரிந்து விட்டு வெட்டு 

நான் சரிந்து போகிறேன்.


இலையைப் பார் அதில்

இருக்கும் பூவைப் பார்

அதன் ஒவ்வொரு கடிக்கும்

நான் துடிக்கும் துடிப்பைப் பார்.

பொறுத்துக் கொள்கிறேன்

நாளை நான் காண்பேன்

வண்ணத்துப்பூச்சியின் சுகப்பிரசவம்.

அவைகளுக்கு உணவளிக்கும்

இலையைப் படைக்கும்

விடை உன்னிடம் இருந்தால்

அறிவித்துவிட்டு என்னை வெட்டு.


பசியோடு வரும் பறவைக்கு

மிருகத்துக்கு ஏன் உனக்கும்

பசியாற்றும் பழம் தரும்

என்னை உன் இதயத்தை இறக்கி வைத்து விட்டு வெட்டு.

யாராவது ஒருவன்

இனி கனி தயாரிக்க முடியும்

என்று தெரிவித்து விட்டு 

என்னை வெட்டு

மரித்துப் போகிறேன்.


வெட்டிய களைப்பா மனிதா

கோடரியைக் கீழே போடு

என் நிழலில் அமரு.

தாகம் தீர்க்க நான் தரும்

இளநீரைப் பருகு.

களைப்பு தீர்ந்தவுடன் 

வேகமாக வெட்டு.


மூச்சு முட்டுகிறதா

காசு கேட்காமல்

நான் தருகிறேன் சுவாசிக்க

பிராணவாயு.

உயிரோடு வாழ் உலகோடு வாழ்

நாங்கள் எல்லாம் போன பிறகு

நீங்கள் வாழ வேண்டும்

அதற்கு கரியமில வாயுவை

உறிஞ்சி வாழ கண்டுபிடி

புதிய நுரையீரல்.

அதற்காகவாவது பயன்படட்டும்

உன் அறிவியல்.

........

சக்திமான் அசோகன்

.......

10-12-2024.

.......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...