மா(ட்டு)ற்றுப் பொங்கல்
. ...............
பட்டிக்காட்டு பட்டியில் கூட
பசு மாடுகளும் பல மாடுகளும்
இருந்தன என்பது பழங்கதை.
கழனியாவும் மனை ஆனபின்பு
எருதுக்கு என்ன வேலை?
பெருங்காயம் தீர்ந்த பிறகு
பெருங்காய டப்பாவுக்கு ஏதுவேலை
இருந்தாலும் மாட்டுப் பொங்கல்
இன்னும் இங்கே நடக்கிறது
வண்ண வண்ண நெட்டி மாலைகள்
கிண்ணம் நிறைய மஞ்சள் குங்குமம்
வழக்கம் போல வாங்கிவந்து
புறக்கடையில் நிற்கின்ற
கரும்பு தின்னாத
இரும்பு மாடுகளுக்கு
சூட்டி மகிழ்கிறான் தமிழன்.
டிராக்டர்களும் அவனைப் போற்றி மகிழும்
மாடுகளைப் போல் மனம் இருந்தால்
சொல்லி அழும். மாமா
இனி மாட்டுப்பொங்கல்
மாற்றுப் பொங்கல் என அழைத்து மகிழ்வோம்.
ஆயுத பூஜை கொண்டாடுபவனுக்கு
மாற்றுப் பொங்கல் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
புதியன புகுதலும்
பழையன கழிதலும் வழுவல
கால வகையினானே
என்று ஒரு தமிழன்
ஏற்கனவே சொல்லி விட்டான்.
.......
சக்திமான் அசோகன்
.......
15-01-2025
.......
No comments:
Post a Comment