பச்சை
............
ஈரமான
அந்த சவக்குழியில்
இளம் பெண்ணின் சடலம்
கவனமாக இறக்கிக்
கிடத்தப்படுகிறது.
வாழ வேண்டிய பெண்
வதங்கி கிடக்கிறாள் பூவைப் போல
என்று வந்தவர்கள்
ஈரமான கண்களோடு
அழுது புலம்புகிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக இளமேனியில்
மண் தள்ளப்படுகிறது.
கதை முடிந்து
விதை போல
புதைந்து கொண்டிருக்கிறாள்.
மண்ணில் வாழ வந்தவளின்
தடயத்தை
நெஞ்சுக்குள்
மிச்ச மீதி இருக்கின்ற
கனவுகளைத்
தின்று தீர்க்கப் போகிறது
புழுக்களும் பூமியின் பற்களும்.
இன்னும் சற்று நேரத்தில்
எல்லாம் முடிந்து விடும்.
மன்னித்து விட்டிருக்கலாம்
என்று சில வாய்களும்
விட்டிருந்தால் மானம்
கப்பல் ஏறி இருக்கும் என்று
சில ஞானிகளும்
கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுத்து ஏதும் சொல்லாமல்
மாவீரன் அலெக்சாண்டர்
சவப்பெட்டியில் தெரிந்த
அவன் கரங்களைப் போல்
தெரியும் கையை மறைக்க முடியாமல் தவிக்கிறது மண்.
கல்வெட்டு போல கையில்
குத்தப்பட்ட பச்சையில்
கடைசியாக ஒரு தடவை
சிரிக்கிறது
காதல் சின்னம்.
.......
சக்திமான் அசோகன்
.......
02-02-2025
.......
No comments:
Post a Comment