சக்திமான் அசோகன் கவிதைகள் 110
...........
. அப்பா !
............
எப்போதும் எனக்கு
அப்பா பற்றியே நினைப்பு
அது என்றும் நெஞ்சுக்குழியில்
அணையாத நெருப்பு.
கொழுந்து விட்டு எரியும்
ஆனால் அது சுடாது என்பது
யாருக்குத் தெரியும் ?
முதன் முதலில் இமை விரித்து
அம்மாவை பார்த்தபோது
அவள் கோலம் விதவை
அப்போதே நானும் போயிருக்கலாம்.
அப்பா போன ஆகாச உலகை.
விதவையைப் பார்த்துவிட்டு
நடையைத் தொடர்வது
அபசகுணம் என்கிறார்களே
என்னை என்ன சொல்வார்கள்?
அபசகுனத்தை சுப சகுனமாக்கி
மூடநம்பிக்கையை முறித்துப் போட்டவள் என் தாய் வீர நாச்சியார்.
குங்குமம் இல்லாத அவள்நெற்றி
அவளைத் தொழுது நான்
அடியெடுத்து நடந்த வாழ்வில்
நிகழ்ந்தது அத்தனையும் வெற்றி.
அப்பா எப்படி இருப்பார்
அம்மாவிடமே கேட்டுவிட்டேன்
சும்மா போய் கண்ணாடியில் பார்
உள்ளே சிரிப்பார் அப்பா என்றாள்.
முன்னாடி நிற்கும்
நான் தானா அப்பா?
ஆம் என்று அவள்
அழுத கண்ணீர்த் துளியில்
பிம்பமாகத் தெரிந்தேன்.
அம்மாக்கள் எப்போதும்
பொய் சொல்வதில்லை...
.......
சக்திமான் அசோகன்
........
15-06-2025
........